தமிழ் : சங்க கால தமிழரின் வாழ்க்கை முறை expr:class='"loading" + data:blog.mobileClass'>

இந்த வலைப்பதிவில் தேடு

சங்க கால தமிழரின் வாழ்க்கை முறை

 



6.4 சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை

தமிழகத்து வரலாற்றுக்குட்பட்ட காலம் சங்க காலம் ஆகும். இக்காலத்தில் தமிழரின் நாகரிகம் முழு வளர்ச்சியுற்றிருந்தது. மூன்று பேரரசுகள் சங்க காலத்தில் அமைந்திருந்ததைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இம்மூன்று பேரரசுகளை ஆண்ட மன்னர்கள் தங்கள் நாட்டிற்கு நன்மையைச் செய்து மேன்மையடையச் செய்தனர். ஒவ்வோர் மன்னர்க்கும் இடையே ஆதிக்கப்போட்டி நடைபெற்று வந்தாலும் நாட்டின் நலனில் அக்கறை கொண்டிருந்தனர். இச்சங்க காலத்தின் அரசியலில் மக்களின் பங்கும் அவசியமாகிறது. எனவே அக்கால மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகிறது.

சங்க காலத்தில் நாடானது நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு அந்நிலத்தின் வழியே மக்களும் தங்களது வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர். குறிப்பாகக் காடும் காட்டைச் சார்ந்த இடத்தை முல்லை என்றும், மலையும், மலையைச் சார்ந்த இடத்தை குறிஞ்சி என்றும், வயலும் வயலைச் சார்ந்த இடத்தை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த பகுதியை நெய்தல் என்றும் பிரித்து அவ்வந்நிலத்தை ஒட்டியே வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறு நிலத்தை ஒட்டிவாழ்ந்த சங்க கால மக்கள் மொழிக்கு மட்டும் இலக்கணம் வகுத்துக் கொள்ளாமல் அவர்களுடைய வாழ்க்கை முறைக்கும் இலக்கணம் வகுத்துக் கொண்டு வாழ்ந்த பெருமைக்குரியவர் ஆவர்.

6.4.1 இல்லறம்

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலங்களில் வாழ்ந்த மக்கள் உழைத்துப் பொருள் ஈட்டுவர், காதலிப்பர், மணமுடிப்பர், இல்லற வாழ்வில் இருந்து இன்பமுறுவர். அக்காலத்தில் இல்லற வாழ்க்கையைப் பெரிதும் போற்றினர்.

இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்று கொன்றைவேந்தனில் ஔவையார் குறிப்பிடுவது போல் இல்லறத்தில் சிறந்து இருந்தனர்.

இல்லறத்தைச் சங்க காலத்தில் அகம் எனக் கொண்டிருந்தனர். இதற்குச் சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய அகப்பொருளைப் பாடும் இலக்கியங்கள் சான்றாக அமைகின்றன.

களவு, கற்பு எனத் தம் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள் சங்க காலத் தமிழர்கள் ஆவர். தாமாகக் கூடுவது களவு வாழ்க்கை என்றும், பெரியோர்களால் கூட்டப்பட்ட வாழ்க்கை கற்பு வாழ்க்கை என்றும் கொண்டிருந்தனர். மேலும் மடல் ஏறுதல் என்ற ஒன்றினையும் பின்பற்றினர். ஒருவன் தான் காதலித்த பெண்ணை மணக்க வாய்க்காதபோது மடல் ஏறுவது வழக்கமாகும். பனங்கருக்கினால் குதிரை ஒன்று செய்து அதன்மேல் அவன் ஏறி அமர்ந்து தன் காதலியின் வடிவம் தீட்டிய கொடி ஒன்றைத் தன் கையில் ஏந்தித் தெருத்தெருவாகச் செல்வான். அக்குதிரையை ஊர்ச் சிறுவர்கள் இழுத்துச் செல்வர். இதனையே மடல் ஏறுதல் என்பர்.

6.4.2 உணவு

அரிசிச் சோற்றையே பண்டைய தமிழர் தம் சிறப்பு உணவாகக் கொண்டனர்.

இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு

(சிறுபாணாற்றுப்படை :193-194)

வரகு, சாமை ஆகியவற்றைச் சமைத்து உண்டார்கள். நெல்லில் பலவகை தமிழகத்தில் விளைந்தது. சங்க கால மக்கள் உணவில் மிளகு, கடுகு, உப்பு, புளி, வெண்ணெய், கருவேப்பிலை போன்றவைகளைச் சேர்த்துக் கொண்டார்கள். நுங்கு, இளநீர், பலாப்பழம், வாழைப்பழம், மாம்பழம் போன்றவைகளையும் உண்டார்கள். கொள்ளுப் பருப்பு, பயிற்றம் பருப்புகளையும் உணவில் சேர்த்துக் கொண்டார்கள்.

பண்டைத் தமிழகத்தில் ஊன் உண்ணும் பழக்கம் பரவலாக இருந்தது. ஊனுக்காக ஆடு, மான், முயல், மீன், நண்டு, கோழி, உடும்பு முதலியவைகளை உண்டார்கள்.

கள்ளுண்ணும் வழக்கம் பழந்தமிழகத்தில் மிகவும் விரிவாகக் காணப்பட்டது. குறிப்பாக, மன்னர், பாணர், புலவர், கூத்தர், பொருநர், விறலியர் அனைவருமே கள்ளினை உண்டு களித்தனர். இயற்கையாகக் கிடைத்த பனங்கள், தென்னங்கள், ஈச்சங்கள் ஆகியவற்றையும், யவனர்களால் கப்பலில் கொண்டு வரப்பட்ட தேறலையும் (தேறல் - தெளிந்த மது), காய்ச்சி இறக்கிய மதுவையும் உண்டனர். யவனர் இரட்டைப்பிடிச் சாடிகளில் மரக்கலம் வழியே கொண்டு வந்த மதுவை உண்டதற்கான சான்றுகள் அரிக்கமேட்டுப் புதைகுழிகளில் காணப்பட்டன.

6.4.3 குலம்

தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள் மக்கள் செய்துவந்த தொழிலுக்கு ஏற்பத் தோன்றியிருந்தன. இடையர், உழவர், எயினர், கம்மியர், குயவர், குறவர், கூத்தர், கொல்லர், தச்சர், பரதவர், வணிகர், வேடுவர் எனப் பல குலங்கள் தோன்றியிருந்தன. இவர்களுக்குள் திருமணம் செய்து கொள்வதில் தடை ஏதும் இல்லாமல் இருந்து வந்தது என்பர். ஒவ்வொரு குலமும் தமிழகத்தில் விலக்க முடியாத ஓர் உறுப்பாகவே செயல்பட்டு வந்தது.

6.4.4 கல்வி

சங்க காலத் தமிழர் கல்வியின் சிறப்பை நன்கு உணர்ந்திருந்தனர். கல்வி எல்லோருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தது. கல்வி கற்பவன் மன்னனாகவும் இருக்கலாம் அல்லது எளிய குடியில் பிறந்தவனாகவும் இருக்கலாம். எந்த ஒரு கட்டுப்பாடும் அக்காலத்தில் காணப்படவில்லை. எக்குலத்தவரும் கல்வி பயிலலாம். ஒவ்வோர் ஊரிலும் கல்வி கற்பிக்கும் கணக்காயர் என்பவர்கள் இருந்தனர். ஊர்தோறும் கல்வி கற்பிக்கும் கணக்காயர் இருக்க வேண்டிய இன்றியமையாமையைத் திரிகடுகம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

கணக்காயர் இல்லாத ஊரும்.... ...... ....
நன்மை பயத்தல் இல்

(திரிகடுகம், 10)

(கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரில் இருத்தல் ஒருவனுக்கு எவ்வித நன்மையும் தருவது இல்லை. கணக்காயர்-ஆசிரியர்; பயத்தல்-தருதல்; இல்-இல்லை).

கல்வி பயிற்றுவிக்கப்படும் இடம் பள்ளி எனப்பட்டது. பெரும்பாலும் திண்ணைகளிலேயே பள்ளிகள் நடைபெற்று வந்தன. கல்வி பயிலும்போது மாணவர்கள் ஓலையின் மேல் எழுத்தாணி கொண்டு எழுதினர்.

மாணவர்கள் கல்வி பயிலும்போது இரந்துண்ணும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது என அறிகின்றோம்.

இரந்தூண் நிரம்பா மேனியொடு

(குறுந்தொகை,33:3)

(இரந்து பெறும் உணவினால் நன்கு வளராத மேனியோடு. மேனி-உடம்பு.)

மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் பொருள் கொடுத்தும் தொண்டுகள் புரிந்தும் பயின்றனர். அக்காலத்தில் கபிலர், பரணர், நக்கீரர் போன்ற பெரும்புலவர் பலர் வாழ்ந்து வந்தனர். மாணவர்கள் தொல்காப்பியம், காக்கைபாடினியம் ஆகிய இலக்கண நூல்களைப் பயின்றதாகத் தெரிகிறது. ஏரம்பம் என்ற ஒரு கணித நூல் பழந்தமிழகத்தில் வழங்கி வந்தது. அதனை மாணாக்கர் பயின்றனர். இவ்வாறாகக் கல்வி நல்ல நிலையில் இருந்து வந்தது.

6.4.5 கலை

பண்டைய காலத்தில் கலைகளில் ஓவியம், இசை, கூத்து, நாடகம் ஆகியவை மிக உயர்ந்த நிலையை எட்டியிருந்ததாகத் தெரிகிறது. ஓவியத்திற்கு என்று ஒரு நூல் வழக்கில் இருந்ததாகவும் கூறுவர். சுவர்களின் மேல் வண்ண ஓவியங்கள் தீட்டியிருந்தனர். எளிதில் அழிந்து போகக் கூடிய வண்ணங்களை ஓவியர்கள் பயன்படுத்தியிருந்தனர்.

இசை, நாடகம், நாட்டியம், கூத்து ஆகிய கலைகளின் வளர்ச்சியைப் பற்றிய விளக்கங்களை சிலப்பதிகார அரங்கேற்று காதையில் விரிவாகக் காணலாம். ஆண்களும், பெண்களும் கூத்திலும், இசையிலும் மேம்பட்டிருந்தனர். மன்னன் முன்பு தம் கலையாற்றலைக் காட்டிப் பெரும் பரிசில்களைப் பெற்று வந்தனர் பழந்தமிழ் மக்கள். கரிகால் சோழனின் மகள் ஆதிமந்தியின் கணவன் ஆட்டனத்தி என்பான் நடனத்தில் ஈடு இணையற்று விளங்கினான்.

நாட்டியம், கூத்து ஆகிய கலைகளைப் பற்றிய பல விரிவான நூல்கள் அக்காலத்தில் தமிழில் இருந்தன. அவை அனைத்தும் காலப்போக்கில் அழிந்து விட்டன.

அரங்கின் முன்பு மூன்று வகையான திரைகள் தொங்கவிடப்பட்டன. திரையை எழினி என்று குறிப்பிட்டனர்.

கூத்தில் பதினொரு வகை இருந்ததாகத் தெரிகிறது. அவையாவன: கடையம், மரக்கால், குடை, துடி, அல்லியம், மல், குடம், பேடு, பாவை, கொடுகொட்டி, பாண்டரங்கம் என்பன.

இவ்வாறாகச் சங்க காலத்தில் கலை நன்கு வளர்ச்சியுற்றிருந்தது.

6.4.6 விளையாட்டு

குழந்தைகள் தெருக்களில் மணல் வீடு கட்டி விளையாடினர். தேர் உருட்டி விளையாடினர். இளைஞர்கள் ஏறு தழுவி விளையாடினர். பெண்கள் மணற்பாவை வனைந்து விளையாடினர்; கழங்குகளைக் கொண்டு அம்மானை ஆடி வந்தனர்; ஊஞ்சல் கட்டி ஆடியும் வந்தனர்.

மேலே கூறப்பட்ட பல பிரிவின் கீழ் நாம் சங்க காலத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்து வந்தனர் என்பது பற்றி நன்றாகக் கற்றுணர்ந்தோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க தமிழ் வளர்க தமிழ்மொழி
நன்றி மீண்டும் வருக ......

ஸ்மார்ட் ரேசன் கார்டு தமிழ்நாட்டு

  ஸ்மார்ட் ரேஷன் கார்டு தமிழ்நாடு ஸ்மார்ட் ரேஷன் கார்டு என்பது வழக்கமான ரேஷன் கார்டின் மாற்றாகும், இது பொதுவாக சமூகத்தில் உள்ள ஒரு குறிப்பிட...