நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
நவாலியூரில் வன்னியசேகரமுதலியார் பரம்பரையில் வந்த கதிர்காமர் என்பாருக்கும், கோண்டாவில் சிங்கைநாயக முதலியார் வழித்தோன்றல் விநாசித்தம்பியின் மகள் இலக்குமிப்பிள்ளைக்கும் 1878ம் வருடம் மகனாக பிறந்தவர்தான் சோமசுந்தரப்புலவர்.
சோமசுந்தரப்புலவருக்கு ஐந்து வயதாகியபோது மானிப்பாய் அருணாசலப் புலவரைக்கொண்டு ஏடு தொடக்குவித்தனர். அருணாசலப்புலவரிடம் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், விரும்பித்தொழுவார் முதலிய நீதிநூற்களை கற்றுக்கொண்ட பின்னர் எண்கணிதமும் நிகண்டும் கற்றனர். புலவருடைய கல்வித்திறமையைக் கண்ட ஆசிரியர் குமரேசர் சதகம், தண்டலையார் சதகம் போன்ற சிறுநூற்களையும் கற்பித்தார். தமிழை மிகவிரும்பிக்கற்றுவருவதையறிந்து ஆங்கிலம் கற்பதும் எளிதாகும் என்றெண்ணி சோமசுந்தரப்புலவரை மானிப்பாயிலிருந்த மாரிமுத்து உபாத்தியாயர் வைத்து நடாத்திய ஆங்கில பாடசாலையில் சேர்த்து விட்டனர். அங்கு ஐந்தாண்டுகள் வரை ஆங்கிலம் கற்ற புலவர் எட்டாம் வகுப்பிற் சித்தியடைந்த பின்னர் நாவாலியூர் இராமலிங்க உபாத்தியாயரிடத்தே ஆசிரிய புகுமுகத் தேர்வு வரையும் ஆங்கிலம் கற்றனர். இராமலிங்க உபாத்தியாயரிடத்தே சிவஞானசித்தியார், இராமாயணம், கந்தபுராணம் போன்ற நூற்களையும் பாடங்கேட்டார்.
இராமலிங்க உபாத்தியாயரின் மகன் வைத்தியலிங்கமும் புலவரும் இணைபிரியாத நண்பர்கள். இருவரும் நெடுங்காலமாகத் தமிழ் நூற்களைக் கற்று நவாலியூரிலே சைவப்பிரசங்கமும் புராணபடனமும் நடாத்தி வந்தனர். புலவர் பதினைந்தாவது வயதிலேயே பாடல் எழுத தொடங்கி பதினெட்டிற் சிறந்த தமிழ்ப் பாடல்கள் யாக்கும் வன்மையைப் பெற்றுவிட்டார்.
அட்டகிரிப் பதிகம், அட்டகிரி முருகன் திருவூஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை என்பன புலவர் இளம்பராயத்தில் செய்த நூல்கள்.
ஆசிரியத்தொழிலே தமக்கு பெரிதும் இணக்கமான தென்று கண்ட புலவர், வட்டுக்கோட்டையிலுள்ள ஆசிரியர் சின்னத்துரை யென்பவரை யடுத்துச் சித்தன்கேணியைச் சார்ந்த கலட்டி யெனும் இடத்திலே ஓர் ஆங்கில பாடசாலையை தொடங்கி இருவருமாக நடாத்தி வந்தனர். அங்கே புலவர் ஆங்கிலம், தமிழ், இதிகாசம் என்னும் பாடங்களை செம்மையாகக் கற்பித்து வந்தனர். பெற்றோரும் பிள்ளைகளும் வித்தியாதரிசகரும் புலவரிடம் பெருமதிப்புக் கொண்டனர்.
சோமசுந்தரப் புலவர் தனது இருபத்தெட்டாவது வயதிலே சங்குவேலியை சேர்ந்த புலவரின் தாய் மாமனாராகிய வேலுப்பிள்ளை என்பாரின் மூத்த புதல்வி சின்னம்மையை மணம் செய்து இல்லறத்தை நடாத்தி வந்தனர். புலவருக்கு வறுமையும் பிணியும் பெரிதும் வந்து வருத்தின. வருத்தினாலும் சிறிதும் கலங்காது நாமகளிலும் முருகப்பெருமானிலும் பத்தி வைராக்கியங் கொண்டு, தமக்குற்ற வறுமையையும் பிணிகளையும் நீக்கி, நிலையான பேரின்ப பெருவாழ்வு பெறுதற்கு வழிகாட்ட வேண்டுமென்று குறையிரந்து பல்வேறு பிரபந்தங்களை பாடி வருவாராயினர். ஆண்டுதோறும் நவராத்திரி விரதம் பூண்டு அந்நாளிலே நாமகள் மேலும் முருகக்கடவுள் மேலும் புதிய புதிய வழிபாட்டு நூல்களை பாடி வந்தனர். ஏறத்தாள இரண்டாயிரத்து ஐந்நூறு செய்யுள்கள் அத்தெய்வங்கள் மேலனவாகப் பாடப்பட்டவை.
ஈழநாட்டிலுள்ள முருகன் திருத்தலங்கள் பலவற்றிற்கும் பாடல்கள் செய்திருக்கிறார் சோமசுந்தரப் புலவர். பெரும்பாலானவை பதிகமும் ஊஞ்சலுமாகவே யமைந்தவை. நவாலியிலுள்ள அட்டகிரிப்பதியி லெழுந்தருளியிருக்கும் முருகக்கடவுள் மீது அட்டகிரிப் பதிகமும், அட்டகிரிக் கலம்பகமும், அட்டகிரி வெண்பாவும், பிள்ளைத் தமிழும் பாடினார். நல்லை முருகன் மீது திருப்புகழும் அந்தாதியும் பதிகமும் பாடினார். கதிரை வேலவர் மேலதாகப் பதிகமும் சிலேடை வெண்பாவும் பாடினார். கந்தவனம் என்னும் பதியிற் கோயில் கொண்ட முருகன்மேற் பதிகமும் திருப்பள்ளியெழுச்சியும் நான்மணிமாலையும் பாடினார். இதைவிடவும் உயிரிளங்குமாரன் நாடகம், இலங்கை வளம், தால விலாசம், கந்தபுராணவுண்மை நூற்பொருள் முதலிய நூல்களையும் புலவர் அவர்கள் செய்திருக்கிறார்கள்.
புலவரவர்கள் தனது எழுபத்தைந்தாவது வயதில் 1953ம் வருடம் இறைபதமெய்தினார்கள்.
புலவரின் கதிரமலைக் கர்ப்பூரவொளி பாடல்களை கீழே காணுங்கள்
அதிரவரு மாணிக்க கங்கை தனின் மூழ்கி
அன்பொடு சிவாயவென வருணீறு பூசி
முதிருமன் பானெஞ்ச முருகவிழி யருவி
முத்துதிர மெய்ப்புளக மூரவுரை குளறப்
புதியசெந் தமிழ்மாலை புகழ்மாலை சூடிப்
பொருவில்கந் தாசுகந் தாவென்று பாடிக்
கதிரமலை காணாத கண்ணென்ன கண்ணே
கர்ப்பூர வொளிகாணாக் கண்ணென்ன கண்ணேவிதிவரைந் திடுபழைய வினையோடி மாய
மிடிகொடும் பிணிசோக விதமான தேயு
மதியொடங் காரகன் முதலான கோளு
மருவிடும் பகையோடு மாறான நாளும்
அதிசுகந் தருஞான வழியான கூடும்
அளவிலன் பூறுமல மணுகாம லோடுங்
கதிரையென் றோதுமலை கண்டகண் கண்ணே
கர்ப்பூர மெய்ச்சோதி கண்டகண் கண்ணே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாழ்க தமிழ் வளர்க தமிழ்மொழி
நன்றி மீண்டும் வருக ......