தமிழக அரசியல்வாதிகளில் கரம்படியாத கைகள் கொண்டவர், நேர்மையானவர் யார் என கேட்டால், பலதரப்பட்ட கொள்கைகள் கொண்டுள்ள கட்சிகளும் வேறுபாடு இன்றி நல்லக்கண்ணு ஐயாவை தான் கைகாட்டுவர்கள். பல கட்சி தலைவர்களும் இதை பல மேடைகளில் பறைசாற்றிக் கூறியுள்ளனர்.
அரசியல் தலைவர் என்பதை தாண்டி அவர் விடுதலை போராட்டத்திலும் பங்குபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இனி, இரா. நல்லகண்ணு அவர்களை பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள் பற்றி இங்கு காணலாம்...
இரா. நல்லக்கண்ணு அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1925ல் பிறந்தவர். இளம் வயதிலேயே தன்னை அரசியலில் ஈடுப்படுத்திக் கொண்டவர்.இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் போது இவரது வயது வெறும் 18 தான்.
இவர் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 நெல்மூட்டைகளை கண்டுபிடித்து ஜனசக்தி என்ற பத்திரிக்கையில் எழுதினார். இதை படித்து அறிந்து கொண்ட ஆட்சியாளர் துரிதமாக நடவடிக்கை எடுத்து எல்லா நெல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தார்.
இதன் பிறகு தான் நல்லக்கண்ணு ஐயா மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டார் என கூறப்படுகிறது. இதன் பிறகு தனது வீட்டில் கூட சொல்லிக் கொள்ளாமல் பொது பணியில் தன்னை ஈடுப்படுத்திக் கொள்ள வீட்டை விட்டு வெளியேறினார்.
கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடைவிதிக்கப்பட்ட போது நெல்லை சதி வழக்கில் இரா. நல்லக்கண்ணு அய்யா கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகள் இவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர் சிறை வாழ்க்கை முடித்து வெளிவந்த போது இந்தியா சுதந்திர நாடாக இருந்தது.
நல்லக்கண்ணு அய்யாவின் 80வது பிறந்தநாள் ஆண்டு இவரது கட்சி இவருக்கு நிதி திரட்டி ஒரு கோடி ரூபாய் அளித்தது. அதை கொடுத்த மேடையிலேயே கட்சிக்கு திருப்பி கொடுத்துவிட்டார்.
தமிழக அரசி அம்பேத்கர் விருது கொடுத்து ரூபாய் ஒரு இலட்சம் கொடுத்தது. அந்த தொகையில் 50,000 கட்சிக்கும், 50,000 விவசாயிகளிகும் கொடுத்துவிட்டார்.
சாதிய கொடுமைகளை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பவர். இதன் தாக்கத்தால் பலமுறை சிறை சென்றவர்.
சாதி வேறுபாடு கூடாது என்பவர். தன் சாதி, பிறர் சாதி என் பாராமல் பொதுமக்களுக்கு சேவை செய்து வந்த தலைவர்.
மக்கள் நல்ல தலைவர் வேண்டும் என குரல் எழுப்புகிறீர்கள். நல்லக்கண்ணு அய்யாவை காட்டிலும் பெரிய நல்ல தலைவர் தமிழகத்தில் உண்டா என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பல மேடைகளில் கூறியுள்ளார். இது உண்மையும் கூட.
நம் நாட்டில் நல்லவர்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால், நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் தேர்ந்தெடுப்பதில் தான் பஞ்சம் இருக்கிறது. இதற்கு பல அரசியல் சூழ்ச்சிகள் தான் காரணம்.
வைகுண்டத்தில் 10 பேரைக் கொண்ட விவசாயக் குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் (26.12.1925) நல்லகண்ணு. அப்பா ராமசாமி அழுத்தமான வைணவ பக்தர். அப்பா வழியில் சைவ உணவுக்கு மட்டுமே பழக்கப்பட்டு வளர்ந்த நல்லகண்ணு, 1948 - 49-களில் தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் மக்கள் கொடுக்கிற எந்த உணவாகினும் சாப்பிடத் தொடங்கினார். பின்னாளில் மீன் பிரியராக மாறிவிட்டார்!
ஸ்ரீவைகுண்டம் கார்னேசன் (இன்றைய கேஜிஎஸ்) பள்ளியில் படித்தவர், திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் புதுமுக வகுப்பில் சேர்ந்தார். இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர் நல்லகண்ணு. ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1943-ல் கம்யூனிஸ்ட் இயக்கம் அவரை அணைத்துக்கொண்டது. எடுத்த எடுப்பிலேயே விவசாயிகள் போராட்டத்தில் இறங்கிவிட்டார்.
ஆயுதப் போராட்டம்தான் புரட்சியைக் கொணர முடியும் என்று கருதிச் செயல்பட்ட காலம் அது. 1949, டிசம்பர் 20 அன்று தோழர் ஒருவரின் வீட்டில் தலைமறைவாகப் பதுங்கியிருந்த நல்லகண்ணுவைக் கைதுசெய்தது போலீஸ். அவரது மீசையைப் பொசுக்கியும் முடிகளைப் பிய்த்தும் போலீஸார் நடத்திய சித்திரவதையே நல்லகண்ணு மீசையைத் துறக்கக் காரணமானது. நல்லகண்ணு, தோழர் பாலதண்டாயுதம் உள்ளிட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1951 முதல் 1956 வரையில் ஏழாண்டுகள் சிறையில் இருந்தார். சிறையில் இருந்தபோது, பற்றிக்கொண்டது வாசிப்புப் பழக்கம். தமிழ்நாட்டில் புத்தகங்கள் அதிகம் வாசிக்கும் தலைவர்களில் ஒருவர் நல்லகண்ணு.
சிறையில் இருந்த வெளிவந்த நல்லகண்ணுவுக்குப் பெண் கொடுக்க முன்வந்தவர் சாதி ஒழிப்புப் போராளி அன்னச்சாமி. 5.6.1958-ல் நெல்லையில் திருமணம். கட்சியின் லட்சியங்களை உணர்ந்து வளர்ந்த ரஞ்சிதம், வாழ்க்கைத் துணையாக மட்டுமன்றி நல்லகண்ணுவுக்கு உற்ற தோழராகவும் இருந்தார். மனைவியின் மறைவு (1.12.2016) நல்லகண்ணுவுக்குப் பேரிழப்பு.
ஒடுக்கப்பட்ட மக்களின் உற்ற தோழர் நல்லகண்ணு. நான்குநேரி வானமாமலை கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச்செல்லும் போராட்டம், வீடுகளுக்கு நிலை வைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் போராட்டம், செருப்பணிந்து பொது வீதிகளில் நடக்கும் போராட்டம் என்று நல்லகண்ணு நடத்திய போராட்டங்களின் வரலாறு நீளமானது. 1999 தென் மாவட்ட கலவரங்களின்போது, ஒரு சாதிக்காரர் கொல்லப்பட்டால், சம்பந்தமே இல்லாமல் எதிர் சாதியில் ஒருவர் கொல்லப்படுவது என்று தொடர் கொலைகள் விழுந்தன. நல்லகண்ணுவின் மாமனாரும் சாதி ஒழிப்புப் போராளியுமான அன்னச்சாமியும் அப்படி வெட்டிக்கொல்லப்பட்டார். நல்லகண்ணு உணர்ச்சிவசப்பட்டிருந்தால் கலவரம் மேலும் பெரிதாகியிருக்கும். ‘உள்ளூர்க்காரர்கள் செய்திருக்கவே மாட்டார்கள்’ என்று உறுதியாக நின்றார். மாமனார் மரணத்துக்கு அரசு கொடுத்த இழப்பீட்டையும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரு சமூக குழந்தைகளின் கல்வி உதவிக்கே கொடுத்துவிட்டார்.
சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறை கொண்டவர். குற்றாலம் அருவிக்கு அருகில் ‘ரேஸ் கோர்ஸ்’ அமைக்கும் முயற்சி நடத்ததை, 1985-ல் ‘தாமரை’யில் கட்டுரை எழுதியே தடுத்து நிறுத்தினார். 2010-ல் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க அவரே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி வாதாடித் தடை வாங்கினார். இப்போது ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர்வாரும் போர்வையில் மணல் எடுக்கப்படுவதற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறார்.
காசியில் பாரதியார் வாழ்ந்த வாழ்க்கைக் குறிப்புகளைத் திரட்டிக் கட்டுரை எழுதினார். முதல் மகளுக்கு ‘காசி பாரதி’ என்றும், ஒரு பேத்திக்கு ‘பாரதி கண்ணம்மா’ என்றும் பெயரிட்டார். பாரதிதாசன் மீதும் பற்று கொண்டவர். பயணங்களில் பாரதி, பாரதிதாசன் நூல்கள் எப்போதும் இருக்கும்! ஒரு நல்ல கட்டுரையை வாசித்துவிட்டார் என்றால் கட்டுரையாளரை அழைத்துப் பாராட்டிவிடுவார்.
இசை ரசிகர். நாகஸ்வர இசை மிகவும் பிடிக்கும். ‘நலந்தானா? நலம்தானா? உடலும் உள்ளமும் நலம்தானா?’ பாடல்தான் அவரது செல்பேசி டயலர் ட்யூன்!
மகள் ஆண்டாளின் காது குத்து நிகழ்வின்போதுகூட வெறுங்கையுடன் நின்று, அப்புறம் நண்பர் ஆ.சிவசுப்பிரமணியத்துடன் கடைக்குப் போய் ‘கவரிங்’ கடுக்கன் வாங்கிக்கொண்டு போன வாழ்க்கை நல்லகண்ணுவினுடையது. ஆனால், பணத்தை எப்போதுமே துச்சமாகத்தான் பார்ப்பார். அவரது 80-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது கட்சி. அதைக் கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார் நல்லகண்ணு. தமிழக அரசு ‘அம்பேத்கர் விருது’ கொடுத்து ஒரு லட்சம் ரூபாயையும் வழங்கியது. பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்!
மொத்தம் மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு, மூன்றிலுமே தோற்கடிக்கப்பட்டார். 1967 மற்றும் 1977 சட்ட மன்றத் தேர்தல்களில் அம்பாசமுத்திரத்திலும், 1999 மக்களவைத் தேர்தலில் கோவையிலும் நடந்த கொடுமை இது!
எளிய வாழ்க்கை, பொதுவாழ்வில் நேர்மை என்று வாழ்கிற நல்லகண்ணுவுக்கு இம்மாதம் 92 வயது நிறைகிறது. தற்போது கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராக இருக்கிறார். போராட்டம், பொதுக்கூட்டம், புத்தக வெளியீடு, திருமணம், துக்க நிகழ்ச்சிகள் என்று தமிழகம் முழுவதும் பம்பரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார் நல்லகண்ணு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாழ்க தமிழ் வளர்க தமிழ்மொழி
நன்றி மீண்டும் வருக ......