பண்டைத் தமிழரின் வாழ்க்கை குறித்த பதிவாக விளங்குகின்ற சங்க இலக்கிய காலகட்டம் என்பது, கி.மு.2-ஆம் நூற்றாண்டு முதலாக நானூறு ஆண்டுகள் என்பது தமிழறிஞர்களிடையே ஏற்புடைய பொதுவான கருத்தாகும். பரந்துபட்ட நிலப்பரப்பினில் ஏற்றத்தாழ்வான பல்வேறு இனக்குழுக்கள், சமூக அமைப்புகள் வழக்கினில் இருந்தபோது, தமிழ் அடையாளம் மக்களை ஒருங்கிணைத்தது.
வேட்டைச் சமூகம் வலுவாக இருந்த நிலையில், இன்னொருபுறம் இனக்குழுத் தலைவரின் கீழ் வாழ்ந்த மக்கள் ஓரளவு பொருளியல் வளத்துடன் இருந்தனர். புதிதாக உருவான வேந்தரின் அதிகாரமானது, புதிய வகைப்பட்ட அரசியல் நிலைமை ஏற்படக் காரணமாக விளங்கியது. போக்குவரத்து, தகவல்தொடர்பு வசதிகளற்ற நிலையில், இனக்குழு வாழ்க்கையின் எச்சங்கள், சங்க காலத்தில் செல்வாக்குடன் விளங்கின. திணைசார்ந்த வாழ்க்கையில் சங்க காலத்தில் காட்டை எரித்து வேளாண்மை செய்தல், கால்நடை வளர்த்தல் காரணமாகப் பொருளியல்ரீதியில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. பல்வேறு இனக்குழுக்களின் தனித்துவமான சமூக அமைப்புகள் சிதைக்கப்பட்டு உருவான வாழ்க்கை முறையில், மனிதர்கள் இயற்கைமீது ஆளுகை செலுத்த முயன்றனர். இயற்கையின் அதியற்புத ஆற்றல்கள், மனிதர்களால் விளங்கிட இயலாத சவால்களாக விளங்கின. இயற்கையின் பேராற்றல் ஒருபுறம், மரணம் இன்னொருபுறம் எனத் திண்டாடிய நிலையில், ஏதாவது செய்து, இயற்கை இகந்த ஆற்றல்களை அமைதிப்படுத்த முயன்றபோது, கடவுள் பற்றிய புரிதல் மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். இயற்கைக்கும் தங்களுக்குமான உறவினை புரிந்துகொள்ள விழைந்த மனிதர்கள், ஏதோவொரு மாய ஆற்றல் எல்லாவற்றையும் இயக்குவதாகக் கண்டறிந்தனர். மாந்திரிகச் செயல்பாடுகள் மூலம் இயற்கையுடன் தொடர்புகொள்ள முடியுமென்று நம்பியபோது மந்திரம், சடங்குகள் தோன்றின. பலிகள் தந்து வழிபாட்டின்மூலம் மாய ஆற்றல்களை அமைதிப்படுத்தலாம் என்ற நம்பிக்கையினால் உருவான கடவுள் பற்றிய எண்ணம்தான், சங்கத் தமிழரின் சமயம் தோன்றியதற்கான பின்புலம். சங்கத் தமிழரின் சமயக் கருத்தியலானது, பன்முகத்தன்மைகளானது.
கடவுள் என்ற கருத்தியல், தொடக்கத்தில் உருவமற்ற பேராற்றலையே குறித்தது. சூர், அணங்கு, சூலி, முருகு போன்ற கடவுள்கள் இயற்கை சார்ந்த இடங்களில் தங்கியிருப்பதான நம்பிக்கை, சங்க காலத்தில் வலுவாக நிலவியது. அணங்கு, வரையர்மகளிர், சூர் போன்ற பேராற்றல்கள், குறிப்பாகப் பெண்களைப் பிடித்துக்கொண்டு அவர்களுடைய உடலினை மெலிவித்துக் கேடு செய்கின்றனவாகக் கருதப்பட்டன. அச்சம், வருத்தம் என்று பொருள் தருகின்ற வகையில் அணங்கு, பேய், சூர் போன்ற பெயர்களால் கடவுள்கள் குறிக்கப்பட்டாலும், அவற்றின் பேராற்றல் காரணமாக வணங்கப்பட்டன. புராதன சமய நெறிப்படி அச்சம்தான் கடவுள் பற்றிய கருத்தியலுக்கு மூலமாக விளங்குவதை சங்கப் பாடல்கள் புலப்படுத்துகின்றன. மனிதனுக்கு நன்மை செய்யும் பேராற்றலைவிட, கெடுதல் செய்யும் பேராற்றல் பற்றிய சிந்தனைதான் முதன்முதலாகச் சடங்குகள் செய்யத் தூண்டின. ஏதோவொரு மாய சக்தியினால் ஏதாவது கேடுகள் விளையும் என்ற நம்பிக்கைதான், சங்கத்தமிழரின் சமயம் உருவாவதற்கான அடிப்படையாக விளங்கியது. மக்களை வருத்தும் இயல்புடைய அணங்கின் இயல்பினைப் புலப்படுத்தும் பாடல் வரிகள்:
கண்டார்க்குத் தாக்கு அணங்கு இக்காரிகை காண்மின்
(பரிபாடல்:11-122)
தாக்கு அணங்கு ஆவது எவன்கொல் அன்னாய்
(ஐந்குறுநூறு:23-4)
தாக்கு அணங்கு என்னும் கடவுள் தம்மை எதிரில் வருகின்றவர்களைத் தாக்கும்; அதிலும் இளம் பெண்களைப் பற்றித் துன்புறுத்தும். இயற்கைச் சூழலில் இருந்து தன்னை விலக்கி, தன்னுடைய இருப்பினை அடையாளம் காணும்போது அணங்கு எனக் கற்பிதமாக்கிக்கொண்ட சக்தியை நினைந்து அச்சம் கொள்வது நடைபெற்றுள்ளது.
அணங்கைப் போலவே அச்சம் தருகின்ற இன்னொரு கடவுளான சூர், பொதுவாக மலைப்பகுதியில் செல்கிறவர்களுக்கு வருத்தம் அளித்தது. சூர் என்பது சூர்மகள் எனப்பட்டது. சூரானது மலைச்சுனை, மலைத்தொடர், மலை ஆகிய மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் உறைந்திருந்தது. சூர் குடியிருக்கும் மலையில் முளைத்துள்ள தழையினைத் தீண்டினாலும், வாடச் செய்தாலும், அது வருத்தும். அதனால் வரையாடுகள்கூட சூர் உறைந்திடும் மலையிலுள்ள தழையினை உண்ணாமல் ஒதுங்குகின்றன.
வாடல் கொல்லோ தாமே அவன் மலைப்
போருடை வருடையும் பாயா
சூருடை அடுக்கத்த கொயற்கு அருந்தழையே?
(நற்றிணை:359)
சூர் கடவுளினால் பற்றப்பட்ட விலங்குகளும் நடுக்கம் அடைகின்ற நிலையை ‘சூர் உறு மஞ்ஞையின் நடுங்க’ (குறிஞ்சிப்பாட்டு:169) என்ற பாடல் வரி வெளிப்படுத்துகிறது. சூர் இருக்கும் என்று கருதப்படுகின்ற மலையே அச்சம் காரணமாக விலக்கினுக்குள்ளாக்கப்படுவது ஒருவகையில் சமய நெறியில் அமைந்ததாகும்
போர்க்களத்தில் பேய், கழுது போன்ற அச்சம் தருகின்ற கடவுள்களைப் பற்றிய சங்கப்பாடல்களில் நிரம்ப இடம் பெற்றுள்ளன. பேய்களின் கண்கள் முரசம் போன்றவை; மேல் நோக்கி எரியும் நெருப்பு போன்ற சிவந்த நாக்கு; யானையின் கால் நகங்கள் போன்ற பற்கள்; கவை போன்று பிளவுண்ட பாதங்கள் போன்று வருணிக்கப்பட்டுள்ள பேயின் வடிவம் காண்பவர்களுக்குப் பயம் தரக்கூடியது. ஆட்டின் கழுத்தையறுத்துப் பலியிட்டுப் பேய்களை அமைதிப்படுத்தும் வழக்கம் நிலவியது. பேய்கள் பற்றிய நம்பிக்கையினால் உருவான வழிபாட்டுமுறை, சமய மயமானதன் விளைவாகும். சங்க காலத்தில் மனிதர்களுக்குக் கெடுதல் செய்யும் இயல்புடையனவாகக் கருதப்பட்ட கொடூரமான வடிவமுடைய பேய்கள், இன்றளவும் தமிழர்களின் வாழ்க்கையில் பயத்தைத் தருவது ஒருவகையில் நகைமுரண்.
தேன் தேர் சுவைய, திரள் அரை, மா அத்து
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந்தீம் கனி,
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச்சுளை அளைஇ,
இறாலொடு கலந்த, வண்டுமூசு அரியல்
நெடுங்கண் ஆடு அமைப் பழுநி, கடுந்திறல்
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான்கோட்டுக்
கடவுள் ஓங்குவரைக்கு ஓச்சி, குறவர்
முறிதழை மகளிர் மடுப்ப, மாந்தி
அடுக்கல் ஏனல் இரும்புனம் மறந்துழி (அகம்:348)
குறவர்கள், மலையில் உறைந்திருக்கும் கடவுளைத் தம்முடைய பெண்களுடன் சேர்ந்து வழிபட்ட காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.
மரம், செடி, கொடிகள் அடர்ந்திருக்கும் சோலைகளிலும் கடவுள் உறைந்திருப்பதாக நம்பி வழிபட்டதை ’காடும் காவும் கவின்பெறு துருத்தியும்’ என நக்கீரர் குறிப்பிடுவதிலிருந்து அறிய முடிகிறது. பெரிய மரங்களின் அடிமரங்களில் கடவுள் இருப்பதாகக் கருதுவது பாடல்களில் இடம் பெற்றுள்ளது. ’தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்’(அகம்:309), ’கடவுள் மரத்த முள்மிடை குடம்பை’(அகம்:348). பனை, வேம்பு, ஆலமரம், மராமரம், வேங்கை, வாகை, மருது, ஓமை போன்ற மரங்களில் இருக்கும் கடவுள்கள், பிறர்க்கு அச்சம் தருவதால் அவற்றை வணங்கிடுவதற்காகப் பெரிய மலர் மாலைகள் சார்த்தி வணங்கப்பட்டன; பலி கொடுத்துத் தம்மைக் காத்திடுமாறு தொழுதல் நிகழ்ந்தது. ஊரார் கூடுகின்ற பொது இடத்தில் இருந்த முதிய மரமும் பலி கொடுக்கின்ற பீடமும், கடவுள் எழுதிய தூணும் இருந்தன. அவற்றுக்குப் பலி கொடுக்க முடியாதவாறு, ஊரார் வேற்றூர் சென்றுவிட்டால், கடவுள்களும் வேறிடங்களுக்குச் சென்றிடும் இயல்புடையவனாக இருந்தன. மரங்களில் துடியான கடவுள்கள் உறைந்திருப்பதான நம்பிக்கை, தொல் சமயம் சார்ந்தது.
அச்சம் தரும் கடவுள்களில் இருந்து சற்று மாறுபட்டதாக முருகு என்னும் கடவுள் கருதப்பட்டது. அது முருகன், நெடுவேள், சேய் போன்ற பெயர்களால் குறிக்கப்பட்டது. மலைச்சாரலில் ஐவனம், தினை முதலிய தானியங்களைப் பயிரிட்டு வாழ்ந்திட்ட குன்றக்குரவர்கள், மலையில் உறைந்த கடவுளான முருகுவை வழிபட்டனர். வேலன் வெறியாடிய சடங்கில், இளம் பெண்ணைப் பற்றிய முருகுவை விலக்கிட, செந்தினையை நீரோடு கலந்து தூவி வழிபட்ட சடங்கு அன்று நிலவியது. மறி ஆட்டின் ரத்தமும் குறுணித்தினையும் முருகு அணங்கிய பெண்ணை நலமாக்கிடப் பயன்படுத்தப்பட்டன. வேலன் வெறியாடலின்மூலம் பெண்ணை அணங்கிய முருகனை ஆற்றுப்படுத்தும் சடங்கு, புராதன சமயம் சார்ந்தது ஆகும். முருகு, பிற்காலத்தில் முருகன் எனக் குறிக்கப்பட்டதுடன், மக்களுக்கு நன்மை செய்கின்ற தெய்வமாக மாறியது. மலையில் உறைந்திட்ட முருகன் இன்றளவும் மக்களால் வழிபடப்படுவது தொடர்கின்றது.
இயற்கையாக நடைபெற்ற மரணத்தைக் கண்டஞ்சிய மனித மனம், அதிலிருந்து விடுபட இயலாமல் தவித்தது. மரணம் தவிர்க்கவியலாதது என்பதை அறிந்தவுடன், அதனைக் கூற்றுவன், கூற்று, காலன் எனப் பழித்தது. மனித உயிர்களை இரக்கம் எதுவுமின்றி பறிக்கின்ற கூற்று பற்றிய பாடல் வரிகள்:
வெந்திறல் கூற்றம் (புறம்:238)
உயிருக்கு அலமரும் கூற்றம் (புறம்:361)
உயிர் உண்ணும் கூற்று (புறம்:4)
மருந்து இல கூற்றத்து அருந்தொழில் (புறம்:3)
அச்சம் ஏற்படுத்துகின்ற பேய், அணங்கு போல கூற்றுவன் இல்லை என்பதை அறிந்திட்ட சங்க காலத் தமிழர்கள், மரணத்திற்குப் பின்னர் மனிதனின் இருப்பு என்னவாகிறது எனப் புனைவைப் பெரிய அளவில் கட்டமைக்கவில்லை. இப்போக்கு ஒருவகையில் தொல் சமயத்தின்பாற் பட்டதாகும்.
இனக்குழுச் சமூகத்தில் பெரிதும் போற்றப்பட்ட வீரம் என்ற கருத்துடன் நடுகல் வழிபாடு தொடர்புடையது. ஆநிரை கவர்தல் அல்லது ஆநிரை மீட்டலுக்கான சண்டைகளில் மரணம் அடைந்த வீர மறவர்களுக்காகப் பாதையோரத்தில் நடுகற்கள் நடப்பட்டன. அவற்றில் இறந்த வீரர்களின் பெயர்கள், தீரச்செயல்கள் போன்றன செதுக்கப்பட்டன. நடுகல் வழிபாடு குறித்த செய்திகள், வேட்டை சமூகம் சார்ந்த சங்க இலக்கியப் பாடல்களில் நிரம்ப இடம் பெற்றுள்ளன.
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும் (அகம்:67)
வலாண் பதுக்கைக் கடவுள் பேண்மார்
நடுகல் பீலிசூட்டி துடிப்படுத்து
தோப்பிக் கள்ளடு துருஉப் பலி குடுக்கும் (புறம்:35)
எழுத்துடை நடுகல் (அகம்:53)
வீரரின் நினைவாக நடப்பெற்ற நடுகல்லை வழிபடுவது சங்க காலத்தில் வழக்கினில் இருந்தது. நடுகல்லை நன்னீர் கொண்டு நீராட்டுதல், அதன்மேல் மஞ்சளைப் பூசுதல், மயிற்பீலி சூட்டுதல், பூக்களால் கட்டப்பட்ட மாலையைச் சார்த்துதல், கள் வைத்து வணங்குதல், நறுமணத் தூபம் காட்டுதல், துருவையாட்டு ரத்தம் பலியாகத் தந்து வழிபடல் போன்றன நடுகல் வழிபாட்டில் இடம் பெற்றன. வீரச்செயலை நினைவுகொள்வதற்காக மண்ணில் ஊன்றப்பட்ட கல்லினுள், கடவுள் உறைந்திடுவதான நம்பிக்கை, காலப்போக்கில் ஏற்பட்டது. இத்தகைய நடுகல் வழிபாடுதான் பின்னர், குலதெய்வம் உருவாவதற்கான அடிப்படையாக விளங்கியது. நடப்பட்ட கல் என்ற பருண்மையான வடிவம்தான் முதன்முதலாக உருவ வழிபாடு தோன்றுவதற்கான பின்புலம் ஆகும். இயற்கைப் பொருள்களைக் கடவுளாக நம்பிய நிலையில் மாற்றம் நடுகல் மூலம் ஏற்பட்டது. வீரம் முதன்மையாக விளங்கிய இனக்குழுச் சமூகத்தில், வீர மரணமடைந்தவன் கடவுளாக வழிபடப்படுவது, தொல் சமய மரபாகும்.
உடல் நலம், பாதுகாப்பு, விளைச்சல், மழை, வேட்டை போன்றன வேண்டி இயற்கை இகந்த பேராற்றல்களுக்குப் படையல் அல்லது பலி கொடுத்து வேண்டும் வழிபாட்டு முறையானது, சங்கச் சமய மரபில் குறிப்பிடத்தக்கது. மரம், நீர்நிலை, மலை, சோலைக்காடுகள், நடுகல் போன்றவற்றை வழிபடும் சமய மரபானது, இன்றளவும் தமிழர் வாழ்க்கையில் தொடர்கின்றது.
நல்பனுவல் நால் வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பல்மாண்
வீயாச் சிறப்பின் வேள்விமுற்றி
யூபம்நட்ட வியன்களம் பலகொல் (புறம்:15)
நான்கு வேதங்களின் வழியே நடத்தப்பட்ட வேள்விகளின் எண்ணிக்கை மிகுதியானது எனக் குறிப்பிடும் புறப்பாடல் மூலம், சங்க காலத்திலே வைதிக சமயக் கருத்தியல் பரவி விட்டதை அறிய முடிகிறது.
புராணக் கதைகளின் வழியாக சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ள தெய்வங்கள் பற்றிய செய்திகளை வைதிக சமயத்தின் தொடர்ச்சியாகக் கருத வேண்டியுள்ளது. தேவர்களின் தலைவனான இந்திரன் அமரர் செல்வன், ஆயிரம் கண்களையுடையவன், துறக்கத்து அமரர் செல்வன், நூறு வேள்விகள் செய்ததனால் உருவான பகைவர்களை வென்றவன் எனக் குறிக்கப்படுகிறான். இந்திரனுக்காகக் கொண்டாடப்பட்ட விழா இந்திரவிழா எனப்பட்டது.
இந்திர விழவிற் பூவின் அன்ன
புந்தலைப் பேடை வரிநிழல் அகவும் (ஐங்குறுநூறு:62:1-2)
இந்திர விழாவில் மலர்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன. இந்திரன், தேவர்கள் பற்றிய தகவல்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றிருந்தாலும், வழிபாட்டிற்குரிய நிலையில் அவர்கள் பெற்றிருந்த இடம் ஆய்விற்குரியது.
முக்கண்ணன் எனப்படும் தெய்வம் உமையைத் தனது உடலில் பாகமாகக்கொண்டு கயிலை மலையில் இருந்து காட்சி தரும் செய்தி முருகாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது. ஆல் அமர் செல்வன், ஆல் கெழு கடவுள் எனப் போற்றப்படுகின்ற சிவனின் வாக்கினில் இருந்து வேதம் பிறந்தது (புறம்:166).
ஞாலம் நாறும் நலம்கெழு நல்இசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன் (அகம்:181)
வேதத்தினால் முக்கண்ணன் உலகம் முழுக்கப் பரவிட, நற்புகழ் மிக்கவனாக விளங்குகிறான். சிவன் பற்றிய தொன்மக்கதைகள் சங்கப் பாடல்களில் பரவலாகக் காணப்படுகின்றன.
வைதிக சமயத்தின் தாக்கம், சங்க காலத்தில் பரவலாகியபோதும், அது பெரும்பான்மைத் தமிழர்களின் சமயமாக மாறிடவில்லை. வேந்தர்களின் அரவணைப்பின்கீழ் செழித்தோங்கிய வைதிக சமயம், மக்கள் இடையே நிலவிய ஏற்றத்தாழ்வான சமூகப் பொருளியல் நிலையை நியாயப்படுத்தியது. வேந்தனின் ஆட்சியதிகாரத்தினுக்குத் தேவைப்படும் அடிமை உடல்கள், மறுமையில் விண்ணுலகில் பெறவிருக்கும் சொர்க்கம் பற்றிய புனைவைக் கட்டமைத்திட வைதிக சமயக் கருத்துகள் பெரிதும் பயன்பட்டுள்ளன.
சங்க காலத்தில் பௌத்த, ஜைன சமயக் கருத்துகள் துறவியர்மூலம் தமிழகத்தில் அடித்தட்டு மக்களிடம் பரவியிருந்தது. வேதமும், வேள்வி மந்திரமும் சமஸ்கிருத மொழியில் சொல்லப்பட்டபோது, பௌத்த, ஜைனக் கருத்துகள் தமிழ் மொழிபெயர்ப்பின் வழியே முன்வைக்கப்பட்டது, பரவலாக்கத்தினுக்குக் காரணமாகும்.
பகட்டு எருதின் பல் சாலை
தவப் பள்ளி தாழ்காவின்
அவிசடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும்புகை (பட்டினப்பாலை:52-55)
இங்குக் குறிப்பிடப்படும் தவப்பள்ளி என்பது பௌத்தர்களின் வழிபாட்டு இடமாகும். இத்தகைய பௌத்தப் பள்ளிகளுக்குப் பெண்கள், தங்கள் குழந்தைகளுடன் சென்று வழிபட்ட தகவலை மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது. ஜைனர்களின் அருகன் கோவிலும் மதுரையில் இருந்தது. அங்கு வந்த இல்லற ஜைனர்கள் பூவும் நறுமணப் புகையும் கொண்டு தெய்வமான அருகனை வழிபட்டதனையும் அறிய முடிகிறது. சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ள ஜைன, பௌத்த சமயக் கருத்துகள், புதிதாக உருவாகிவரும் அதிகார அரசியலுக்குப் பின்புலமாக அமைந்திருந்தன.
தொகுக்கப்பட்டுள்ள சங்கப் பாடல்களை ஆராய்ந்தால், வைதிக சமயக் கருத்துக்கள், சங்கப் புலவர் மரபினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவை பாடல்களின் வழியே மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டதனை அறிய முடிகிறது. அதேவேளையில் பண்டைத் தமிழர்களின் தொல் சமயமானது, இயற்கையை முன்வைத்த நிலையில் மக்களிடம் செல்வாக்குடன் தனித்து விளங்கியதையும் சங்கப் பாடல்கள் பதிவாக்கியுள்ளன. சங்கத் தமிழர்களின் காலகட்டம் என்பது அரசியல் ,பொருளியல்ரீதியில் வேறுபாடுகளை உள்ளடக்கிய ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பு ஆகும். இதனால்தான் ஒரு குறிப்பிட்ட கடவுள் அல்லது தெய்வத்தை முன்னிறுத்திய ஒற்றைத்தன்மையைக் கண்டறிய முடியவில்லை. தொல் சமயம், வைதிக சமயம், பௌத்த சமயம், ஜைன சமயம் ஆகிய சமயங்கள், சமச்சீரற்ற நிலையில் தமிழர் வாழ்க்கையில் பரவி இருந்த நிலையைச் சங்கப் பாடல்கள் வெளிப்படுத்தியுள்ளன. இனக்குழு வாழ்க்கையின் எச்சங்கள் நிரம்பியிருந்த சங்க காலத்தில் தமிழரின் சமயமானது, ஒப்பீட்டு நிலையில் பெரிதும் தொல் சமயத் தன்மையுடையதாக விளங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாழ்க தமிழ் வளர்க தமிழ்மொழி
நன்றி மீண்டும் வருக ......