உதயசூரியன் மோகம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரணையூர் என்ற கிராமத்தில் 1966-ம் ஆண்டு சீமான் பிறந்தார். இவரது பெற்றோர் செந்தமிழன் - அன்னம்மாள். அரணையூரில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை படித்தார். ஆறாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் ஹாஜி கே.கே.இப்ராஹிம் அலி மேல்நிலைப் பள்ளியிலும் 11 - 12 ஆம் வகுப்புகளை இளையான்குடியிலும் படித்தார். இதன்பின்னர், இளையான்குடியில் உள்ள ஜாகிர் ஹுசைன் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரத்தை நிறைவு செய்தார்.
சீமானின் தந்தை தீவிரமான காங்கிரஸ் தொண்டர். பள்ளிப் பருவத்திலும் கல்லூரிக் காலத்திலும் திராவிட இயக்க சிந்தனைகளில் பிடிப்புள்ளவராக சீமான் இருந்துள்ளார். இதற்காக தனது நோட்டு புத்தகங்களில் எல்லாம் உதயசூரியன் சின்னத்தைத்தான் வரைந்து வைத்திருப்பார். திராவிட இயக்க வரலாறு குறித்து நண்பர்களிடம் விவாதிப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார். இதன்பிறகு திரைத்துறையின் மீதான மோகம் காரணமாக சென்னை வந்தவர், இயக்குநர் பாரதிராஜா, மணிவண்ணன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.
பிரபாகரனுடனான சந்திப்பு
இதன் காரணமாக, சீமான் இயக்கிய முதல் படமாக `பாஞ்சாலங்குறிச்சி' அமைந்தது. இது வெற்றிப்படமாகவும் அமைந்ததால் `இனியவளே', `வீரநடை' எனத் தொடர்ந்து படங்களை இயக்கினார். அவை பெரிதாகப் பேசப்படவில்லை. பின்னாளில், மாதவன் நடிப்பில் சீமான் இயக்கிய `தம்பி' படம் பெரும் வெற்றி பெற்றது. இதன்பிறகு அவர் இயக்கிய `வாழ்த்துகள்' படம் தோல்வியைத் தழுவியது. இதன்பிறகு `பள்ளிக்கூடம்', `மகிழ்ச்சி' எனப் பல படங்களில் நடிக்கவும் செய்தார்....
திரைத் துறையில் கோலோச்சினாலும் பெரியாரிய கொள்கைளையும் சாதி ஒழிப்பையும் மையமாக வைத்து சீமான் பேசி வந்தார். அவரது பேச்சைக் கேட்பதற்காகவே கூட்டம் கூடியது. இயல்பாகவே திராவிட இயக்க சிந்தனைகளில் ஊறித் திளைத்ததால் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அன்புக்குரியவராகவும் இருந்தார். கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கானவராக இருந்தார்.
கருணாநிதியும் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம், `சீமான் வந்திருக்கு' என உற்சாகத்தை வெளிப்படுத்துவதும் வழக்கமாக இருந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவை ஆதரித்துப் பிரசாரமும் மேற்கொண்டார். 2008 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் மேகங்கள் சூழத் தொடங்கிய காலகட்டத்தில் பிரபாகரனை சந்தித்துப் பேசினார்.
தொடர் கைதுகள்
இதன் தொடர்ச்சியாக, இலங்கை உள்நாட்டுப் போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்ட நேரத்தில் சீமான் அதற்கெதிராக தீவிரமாகப் பேசத் தொடங்கினார்.
'எந்தவகையிலாவது புலிகள் இயக்கத்துக்கு உதவ வேண்டும்' என்று பேசுவதற்காக அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்திக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதையடுத்து திமுக மீது அவர் அதிருப்தி கொள்ளத் தொடங்கினார்.
தொடர்ந்து ராமேஸ்வரத்தில் சீமான் பேசிய பேச்சு, அவரது அரசியல் பாதைக்கு முக்கிய நுழைவு வாயிலாக அமைந்தது. ராமேஸ்வரம் பேச்சுக்காக சீமான் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஈரோட்டில் பேசியதற்காகவும் கைது செய்யப்பட்டார். தேசிய பாதுகாப்புச் சட்டம், பாஸ்போர்ட் முடக்கம், அரசின் தொடர் கண்காணிப்புகள் எனப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்.
உருவானது நாம் தமிழர் கட்சி
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போர் முடிவுக்கு வந்த நேரத்தில், தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் அன்றைய தி.மு.க அரசுக்கு எதிராக அதிருப்தி நிலவியது. இப்படிப்பட்ட சூழலில் 2009 ஆம் ஆண்டு நாம் தமிழர் இயக்கத்தை மதுரையில் தொடங்கினார் சீமான். அடுத்த ஆண்டே மே மாதம் இந்த அமைப்பு அரசியல் கட்சியாக உருமாற்றம் அடைந்தது.
தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டில் 2006 தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட சீமான், ஈழப் பிரச்னையை முன்னிறுத்தி 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டார். `இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்ற வாசகத்தையும் பயன்படுத்தினார். `தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் வெற்றியைத் தடுப்பது' என்ற ஒற்றை இலக்கில் அவரது பிரசாரம் அமைந்தது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் ஆட்சி அமைந்தது. தொடர்ந்து 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகப் பிரசாரம் மேற்கொண்டார்.
3.87 சதவிகித வாக்குகள்
இதன்பின்னர், `திராவிடக் கட்சிகளுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வது' என்ற முடிவில் இருந்து பின்வாங்கிய சீமான், நேரடியாகத் தேர்தல் களத்தில் இறங்கினார். `எங்கள் திருநாட்டில் எங்களின் நல்லாட்சியே' என்ற முழக்கத்தை முன்வைத்தார். `தமிழ்நாட்டில் எந்த இனத்தவரும் வாழலாம். ஆனால் ஆள்கின்ற உரிமை எங்களுக்கு மட்டுமே' என்ற கருத்தை முன்வைத்தார். `இது இனவாதப் பேச்சு' எனப் பலமட்டங்களில் இருந்து விமர்சனம் கிளம்பியது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்கினார்.
இந்தத் தேர்தலில் கடலூர் தொகுதியில் களமிறங்கிய சீமான், அ.தி.மு.க வேட்பாளர் எம்.சி.சம்பத், தி.மு.க வேட்பாளர் இள.புகழேந்தி ஆகியோரை எதிர்த்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார். முடிவில் அ.தி.மு.க வேட்பாளர் எம்.சி.சம்பத் வெற்றிபெற்றார். சீமான் ஐந்தாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் 1.1 சதவிகித வாக்குகளை அக்கட்சி பெற்றது. அதேநேரம், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு 3.87 சதவிகித வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது. இது சீமானை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
தொடர்ந்து, 2020 ஆம் நடைபெற்ற தமிழக உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரியில் ஒரே ஒரு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியை நாம் தமிழர் கட்சி பெற்றது. அதேநேரம், முப்பதுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஊராட்சி மன்றத் தலைவர்களாக வெற்றி பெற்றதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ` மக்களவைத் தேர்தலைவிட உள்ளாட்சியில் அதிக வாக்குகளை பெற்றுள்ளோம். சாதி, பணம் அனைத்தையும் தாண்டி நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். கிராமப்புறங்களில் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். 4 சதவிகிதமாக இருந்த எங்களின் வாக்கு சதவிகிதம், 10 சதவிகிதமாக உயர்ந்துள்ளது' என பெருமிதப்பட்டார்.
சீமானின் இலக்கு
2021 சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. சரிபாதி ஆண், பெண் வேட்பாளர்களை சீமான் களமிறக்கியுள்ளார். `தேர்தல் அரசியலில் ஓரிரு இடங்களை வெல்வதால் பலனில்லை, மொத்த மாநிலத்தையும் கைப்பற்ற வேண்டும்' என்பதே சீமானின் பேச்சாக இருக்கிறது. இந்தமுறை திருவொற்றியூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கே.பி.பி.சங்கர், அ.தி.மு.க வேட்பாளர் குப்பன் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்தே தான் களமிறங்குவதாகவும் சீமான் அறிவித்துள்ளார்.
தமிழக அரசியல் கட்சிகளிலேயே `சுற்றுச்சூழல் பாசறை' என்ற அமைப்பை முதலில் தொடங்கியது நாம் தமிழர் கட்சிதான். இதன்பின்னரே `சுற்றுச்சூழல் அணி' என்ற ஒன்றை தி.மு.க ஏற்படுத்தியது. மரம் நடுதல், கண்மாய் தூர்வாருதல், பனைவிதை சேகரித்தல் எனச் சூழல் பணிகளையும் நாம் தமிழர் கட்சியினர் முன்னெடுக்கின்றனர். டெல்டா மண்டலத்தைப் பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வருகிறார் சீமான். தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுப்பது, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவது, இயற்கை வேளாண்மை என மண்சார்ந்த பிரச்னைகளுக்குத் தனது தேர்தல் பிரசாரத்தில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
2021'ல் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து நின்று 3 ன்றாம் இடத்திலும் சில இடங்களில் 2 ஆம் இடத்தையும் பிடித்தனர் 7 சதவீதம் மற்றும் 36 இலட்சம் வாக்குகள் மேலாக பெற்றுள்ளனர்....இது குறிப்பிடத்தக்கது.....
தொடரும் விமர்சனங்கள்
`அ.தி.மு.க அரசுக்கு எதிராகப் பேச மறுக்கிறார்'; `சீமானிஸம் என்ற ஒன்றை முன்வைக்கிறார்' என்றெல்லாம் அவர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகளே குற்றம் சாட்டினாலும், `இது நான் உருவாக்கிய கட்சி, இங்குள்ளவர்கள் என் பேச்சைக் கேட்கக் கூடியவர்கள்' எனக் குரலை உயர்த்துகிறார் சீமான். `பிரபாகரனுடனான சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் உண்மையா?' என்ற விமர்சனங்களை ஈழ ஆதரவு தமிழக தலைவர்கள் முன்வைத்தாலும், `அதற்குப் பதில் சொல்ல வேண்டியது எங்கள் தலைவர் பிரபாகரன்தான்' என சிரித்தபடியே கடந்து செல்கிறார்.
தேர்தல் அரசியலில் நுழைந்ததில் தொடங்கி தற்போது வரையில் `தனித்துப் போட்டி' என்ற புள்ளியில் இருந்து சீமான் மாறாமல் இருக்கிறார். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோதே அவர்களை எதிர்த்துப் பிரசாரம் செய்தவர் சீமான். தற்போதைய தேர்தல் களத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் எனப் புதுப்புது கட்சிகள் வந்தாலும், நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் சீமான்.......