தமிழ் : ஐயா கக்கன் வரலாறு expr:class='"loading" + data:blog.mobileClass'>

இந்த வலைப்பதிவில் தேடு

ஐயா கக்கன் வரலாறு

 

கக்கன் வாழ்க்கை  வரலாறு - அரசு பணம் வீணாகக்  கூடாது என இறுதி வரை செயல்பட்டார்


சென்னை ஜூன் 18,   தமிழக அரசியல்வாதி கக்கன் வாழ்க்கை வரலாறு ,இவர்  விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதரப் பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவரும், தலைசிறந்த அரசியல்வாதியும் ஆவார்.                                                                                                                                                               
மதுரை மாவட்டம் தும்பைப்பட்டியில் பிறந்தவர் அப்பழுக்கற்ற அரசியல்வாதி, காந்தியவாதி, காங்கிரஸ்காரர் கக்கன். காமராஜ், பக்தவச்சலம் அமைச்சரவையில் 10 ஆண்டுகள் பணியாற்றியவர். ஐந்தாண்டுகள் லோக்சபா உறுப்பினராகவும் இருந்தார். என்றாலும் குடியிருக்க வீடில்லாமல் வாடகை வீட்டில் வாழ்ந்தார். அரசு பஸ்சில் பயணம் செய்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவரது கடைசிகாலம் கழிந்தது.
பொதுவாழ்வில் தூய்மையும், நேர்மையும், செயல்திறனும் கொண்டு அரசுப்பணியை மக்கள் பணியாக நேர்த்தியாக செய்தவர். அமைச்சரானதும் மதுரை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் ஓராசிரியர் பள்ளியை நிறுவ முதல் உத்தரவை பிறப்பித்தார். மதுரையின் பெருமைகளில் ஒன்றான விவசாயக்கல்லூரி அமைய காரணமானவர்.ஊழலற்ற, நேர்மையான, தலையீடுகள் இல்லாத நிர்வாகத்திற்கு உதாரணமாக திகழ்ந்த கக்கன், இன்று நம் 'கனவு அரசியல்வாதி'. மக்கள் சேவைக்கு வருபவர்கள் இவர் போல் இருக்கமாட்டார்களா என்று நாம் ஏங்க வேண்டி உள்ளது.
இளமைக்காலம்  ;கக்கன் ஜூன் 18, 1907 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள தும்பைபட்டி என்ற கிராமத்தில் ஒரு பறையர் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக)ப் பணிபுரிந்தவர்.தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் திருமங்கலம் அரசு மாணவர் விடுதியில் தங்கி பி. கே. என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வியை  கற்றார்.
இந்திய விடுதலை போராட்டம் ;
கக்கன் தனது பள்ளி மாணவப்பருவத்திலேயே காங்கிரஸ்  இயக்கத்தில் தன்னை இணைத்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார்.அன்றைய காலகட்டத்தில் பறையர்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினைக் கொண்டு வந்ததின் விளைவாகத் பறையர்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நூழைய தடைசெய்யப்பட்டிருந்ததை இச்சட்டம் நீக்கியது. மதுரையில் கக்கன் பறையர்கள் மற்றும் சாணர்களைத் தலைமை தாங்கி மதுரை கோயிலினுள் நுழைந்தார் ஆங்கிலேயனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1946 இல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று 1946 முதல் 1950 வரை உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார்.
சுதந்திர இந்தியாவில் அரசியல் பணி ;
கக்கன் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார். 
 காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டி) தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார் 1957 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மகாணத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை,ஆதிதிராவிடர் நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்று கொண்டார் மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார் ஏப்ரல் 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார் அக்டோபர் 3, 1963 அன்று மாநில உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 1967 வரை அப்பொறுப்பிலிருந்தார்

மேலூர் தெற்கு தொகுதியில் 1967 சட்டமன்றத் தேர்தலில் கக்கன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஒ.பி. ராமனிடம் தோற்றார். இத்தேர்தல் தோல்விக்குப்பின் 1969 முதல் 1972 வரை தமிழ்நாடு காங்கிஸ் குழுத் (கமிட்டித்) தலைவர் பொறுப்பு வகித்தார். 1973 இல் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார்.
கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக திகழ்ந்தார். மகாத்மா கந்தியின் வழியை பின்பற்றி நடப்பவர். பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான இராமனின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை அறிவித்தபொழுது, கக்கன் அதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பதாகும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்
                                
கக்கனின் பொதுவாழ்வு தூய்மையை அறிய, அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குனர் இளசை சுந்தரம் எழுதிய 'தியாகசீலர் கக்கன்' என்ற புத்தகத்தில் இருந்து சில...
தங்கப்பேனா தகுதிக்கு மீறியது:   ஒருமுறை மலேசிய அமைச்சர், கக்கனை சந்தித்தார். கக்கன் வைத்திருந்த பழமையான பேனாவை பார்த்து விட்டு, தனது பேனாவை அவர் தந்தார். அந்த தங்கப்பேனாவை வாங்க மறுத்த கக்கன், அந்த தகுதி தனக்கு இல்லை என்றார். எனினும் விடாப்பிடியாக அவர் தர, வேறு வழியில்லாமல் பெற்றுக்கொண்ட கக்கன், ஊழியரை அழைத்து அதனை அலுவலக புத்தகத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்தார். 'இது அரசுக்கு அல்ல; உங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு தான் தந்தேன்' என்று மலேசிய அமைச்சர் கூறியும் கக்கன் கேட்கவில்லை. 'நான் அமைச்சராக இல்லை என்றால் இந்த தங்கப்பேனாவை தந்திருப்பீர்களா? மக்களுக்கு தொண்டாற்ற பொறுப்பேற்றுள்ள நம்மை போன்றவர்கள் பரிசுப்பொருட்களை சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ள கூடாது' என்றார் கக்கன்.'உங்கள் சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ளாமல், அரசுப்பொருட்களோடு சேர்ப்பதாக இருந்தால் தரமாட்டேன்' என அந்த அமைச்சர் கூற 'நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்' என்று தங்கப்பேனாவை திருப்பி தந்து விட்டார் கக்கன்.கறைபடாத கரத்திற்கு சொந்தக்காரர் கக்கன் என்பதற்கு இந்த சம்பவம் சிறு உதாரணம். 
மனைவி என்றாலும்:  ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, கக்கன் வீடு திரும்பும் போது அவரது வீட்டிற்கு அரசு ஊழியர் ஒருவர் மண்ணெண்ணெய் வாங்கி வருவதை கண்டார். 'யார் வாங்கி வரச்சொன்னது' என்று கக்கன் கேட்க, 'அம்மா தான்(கக்கன் மனைவி) வாங்கி வரச்சொன்னார்' என்று ஊழியர் கூற, மனைவியை அழைத்து அவர்கள் முன்னிலையில் சத்தமிட்டார். 'இவர் யார் தெரியுமா? அரசு ஊழியர். உனக்கு ஊழியம் செய்பவர் அல்ல' என்று திட்டி தீர்க்க கண்ணீர் மல்க நின்றார் கக்கன் மனைவி. 'அதோ ரோட்டில் மண்ணெண்ணெய் கேன் உள்ளது. நீயே வீட்டிற்கு எடுத்துப்போ' என்றார். அரசு ஊழியர்கள் அரசுப்பணியை மட்டுமே செய்ய வேண்டும் என்பது கக்கன் கருத்து.
அரசு உண்டியலில் அம்மா நகை :  கக்கனின் மூத்த மகன் பத்மநாபனின் மகள், தீயணைப்பு துறையின் முதல் பெண் அலுவலர், வடமேற்கு மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் தன் தாத்தா பற்றி கூறுகிறார்.என் அம்மா கிருஷ்ணகுமாரி ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுப்பையாவின் மகள். எங்க அப்பாவிற்கு அம்மாவை திருமணம் செய்ய முடிவு செய்த காலகட்டம் அது... தாத்தா கக்கன், அம்மாவின் அப்பாவை அழைத்து, ''அமைச்சர் வீட்டில் சம்பந்தம் செய்ய போகிறோம் என கடன் பட்டு விடாதே, பெண்ணை மட்டும் அனுப்பினால் போதும்,'' எனக் கூறி விட்டார்.ரொம்ப எளிமையாக வாழ்ந்தவர் தாத்தா. நேர்மை, ஒழுக்கம், அன்பை இறுதி வரை பேணியவர். அமைச்சரான பிறகும் கூட அவர் இரண்டு வேட்டிகள், இரண்டு சட்டைகள் மட்டுமே வைத்திருந்தார். மறுநாள் அரசு விழா என்றால், முதல் நாள் இரவு ஒரு சட்டை, வேட்டியை துவைத்து காய வைப்பார். அரசு பணம் வீணாக கூடாது என இறுதி வரை செயல்பட்டார். அவர் அரசு வீட்டில் இருந்தால், அவரது அறையில் மட்டும் தான் விளக்கு எரியும்.உலக போர் நடந்த போது, மறைந்த பிரதமர் நேரு அழைப்பின் பேரில் என் அம்மா உட்பட வீட்டுப் பெண்களுடைய வளையல், செயின் போன்ற நகைகளை எல்லாவற்றையும் தாத்தா வாங்கி அரசு உண்டியலில் போட்டு விட்டார்.1966ல் அவர் மாம்பலத்தில் அரசு வீட்டில் வாடகைக்கு குடியிருந்த போது, ஒரு முறை அரசு பஸ்சில் பயணித்துள்ளார். அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு அவரிடம் போதிய காசு இல்லை. அவரை தெரிந்து கொண்ட கண்டக்டரும், 'இருக்கிறதை கொடுங்க,' எனக் கூறியுள்ளார். ஆனால் தாத்தா, தன்னிடமிருந்த காசை கொடுத்து விட்டு அதற்கான ஸ்டாப் வந்ததும் இறங்கி நடந்து சென்றுள்ளார். அவரது பேத்தி என்பது எனக்கு பெருமை.                                                     அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் வாடகை வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கே பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.
எம்.ஜி.ஆர் மதுரை முத்துவை பார்க்க வந்தவர் செய்தி கேட்டு இவரைக்கண்டு கலங்கினார் ,”நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் !” என்று அவர் கேட்டுக்கொள்ள ,”நீங்கள் பார்க்க வந்ததே போதும் !” என்று இயல்பாக மறுத்தார். யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார்.
சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன அவரின் பிறந்தநாள் 18 ஜூன் 1908 இன்று...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க தமிழ் வளர்க தமிழ்மொழி
நன்றி மீண்டும் வருக ......

ஸ்மார்ட் ரேசன் கார்டு தமிழ்நாட்டு

  ஸ்மார்ட் ரேஷன் கார்டு தமிழ்நாடு ஸ்மார்ட் ரேஷன் கார்டு என்பது வழக்கமான ரேஷன் கார்டின் மாற்றாகும், இது பொதுவாக சமூகத்தில் உள்ள ஒரு குறிப்பிட...