பாண்டிய மன்னன் வரலாறு
பாண்டியதேசம் சோழதேசத்திற்கு தெற்கிலும், சேரதேசத்திற்கு கிழக்கிலும், ஓர் அகன்று பரவி இருந்த தேசம் ஆகும். இந்த பாண்டிய தேசத்தில் பூமி மேற்கே உயரமாகவும், கிழக்கே சரிந்தும் தென்வடலாய் நீண்டும், கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும், பள்ளமும், ஆகக் காணப்படும். இந்த தேசத்தில் நிறைய மலைகள் உண்டு, இவற்றில் பொதியம் மலையே மிகவும் உயரமானது. சிறு, சிறு குன்றுகளும், இத்தேசத்தின் நடுவிலுள்ள சமதளமான பூமியில் சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த தேசத்தின் தெற்கில் மலையம், தர்துரம், என்னும் பெரிய மலைகளும், வருஷகிரி, வராககிரி, போன்ற சிறு மலைகளும் இருக்கும். இந்த கர்னாடக தேசத்தில் யதுகிரி, ஸஹயம் என்னும் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி நதி பாண்டியதேசத்தை செழிக்க வைக்கின்றது. தெற்கில் பொதியம் மலையில் உற்பத்தியாகும் வைகை நதி சிறப்பு வாய்ந்தது இந்த பாண்டியதேசத்தில் நெல், வாழை, கரும்பு, போன்ற பயிர்களும், பருத்தி, பயறுவகைகளும் விளைகின்றது. காவிரிநதி கரையில் பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட தஞ்சை, இராமேசுவரம் சிறப்பு வாய்ந்தது.
தனிப்பாடல்களின் திரட்டு நூலான பெருந்தொகையில் பாண்டிய நாட்டின் எல்லைகள் பற்றிய பாடல் ஒன்று உள்ளது.
வெள்ளாறு அதுவடக்கா மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் – உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி – பெருந்தொகை
இந்தப் பாடலை 12ஆம் நூற்றாண்டில் சோழநாட்டை ஆண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அவைக்களப் புலவராய் இருந்த கம்பர் பாடியது என்று பாவாணர் சொல்லுகிறார். இப்பாடல் படி, வடக்கில் வெள்ளாறும் மேற்கில் பெருவழியும் தெற்கில் கன்னியாகுமரியும் கிழக்கில் வங்காள விரிகுடா கடலும் எல்லைகளாக இருந்துள்ளன.
பாண்டியர் பெயர்கள் :
பாண்டியர் தங்கள் பெயரில் மாறன், வழுதி, சடையவர்மன், மாறவர்மன், வர்மன், செழியன், முது குடுமி என்ற ஒட்டுக்களைக் சேர்த்துக் கொண்டனர். இவர்களின் குலப்பெயர் பரவலாகப் பாண்டியர் என அறியப்படினும் இவர்கள் சந்திர குலம், தென்னர் குலம், கவுரியர் குலம், பஞ்சவர் குலம், குடுமி குலம் என்றும் பாடல்களில் போற்றப்படுகின்றனர்.
தொன்மங்களில் பாண்டியர்கள் :
குமரிக் கண்டத்தில் தோன்றிய மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து. இந்தியப் பெருங்கடலில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது. இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது. இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது. இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலை நகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.
இராமாயணம் :
பாண்டிய மன்னர்களின் இடைச்சங்க தலைநகரான கபாடபுரம் பொன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது என்றும் முத்து, பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது என்றும் இராமாயணத்தில் உள்ளது.
மகாபாரதம் :
திருச்செங்குன்றில் பாண்டவர் படுக்கை உண்டு. திருப்பாண்டி கொடுமுடிதான் விராடநாடு. பாண்டவர் கொடுமுடியின் புறநகரில் வன்னி மரத்தில்தான் ஆடைகளையும் ஆயுதங்களையும் மறைத்து வைத்தனர். மேலும் அருச்சுனன் பாண்டிய மன்னன் ஒருவன் மகளை மணந்தான் எனவும் உள்ளது.
புராணங்கள் :
பல இந்து மதப் புராணங்களும், தமிழ் இலக்கியம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் பல பாண்டிய மன்னர்கள் இருந்ததாகவும் அவர்கள் வரிசையாகப் பதவியேற்றதாகவும் குறிப்பிடுகின்றன. இது தவிர்த்து திருவிளையாடல் புராணங்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாண்டிய மன்னர்களும், நற்குடி வேளாளர் வரலாற்றில் 201 பாண்டிய மன்னர்களும், இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரையில் 197 பாண்டியர்களும் குறிப்பிடப்படுகின்றனர்.
இப்புராணங்கள் படி மலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சி, இவளது திருமணம் மதுரையில் சிவனுடன் நடந்தது. சோமசுந்தரப் பெருமானாக மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ் வளர்த்தார் இவர். மதுரை மீனாட்சி பெரும்படையோடு இமயம் வரை படையெடுத்து சென்றாள். அதன் வழி வந்த வழி முறையினரே மௌரியர்கள் என்று கருதப்படுகிறது. அந்த வழியில் சித்திராங்கதன் வந்தான் என்பதும் அவன் மகளே சித்திராங்கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுச் சான்றுகள் – பிற நாட்டவர் பதிவுகள் :
சுமார் 300 கி.மு. – மெகஸ்தெனஸ் இந்தியா வருகை. பண்டையா என்னும் அரசி பாண்டியர் நாட்டை ஆண்டதாக குறிப்பு. மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. எரெக்ளீசு (Heracles) என்ற மன்னனுக்கு ‘பண்டேயா’ என்ற பெண் பிறந்தாள். அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் கொடுத்தான். அதில் 350 ஊர்கள் இருந்தன. நாள் தோறும் அரசிக்கு ஓர் ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்” என்ற செய்தி யவன நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுமார் கி. மு. 60 – நிகோலசு தமாசுகசு மற்றும் ஸ்ட்ரேபோ மதுரையை ஆண்ட பாண்டியர் மன்னன் ஒருவன் அகஸ்டஸ் மன்னனுக்கு தூதனுப்பியதாக குறித்தனர்.
சுமார் கி.பி. 1 – 140 – பிளைனி மற்றும் தாலமி மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாக குறித்தனர்.
சுமார் கி.பி. 1 – 200 – முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தமிழர் யவனர்களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர்.செங்கடல் செலவு என்னும் கிரேக்க வணிக நூலேட்டில் மூவேந்தர் துறைமுகங்களான நறவு, தொண்டி, முசிறி, நீலகண்ட நகரம், கொற்கை, அழகன்குளம், காலப்பட்டினம், பாண்டிச்சேரி, எயிற்பட்டினம் போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாக பெரிப்ளுசு கூறுகிறார்.
சுமார் கி.பி. 250 – சீன நாட்டு வரலாற்றியல் அறிஞர் யூ உவான் பாண்டியர் அரசாங்கத்தை பாண்யுவி எனக் குறித்தார். பாண்டிய மக்கள் சீனர்களைப் போலவே சிறிய உயரம் படைத்திருந்தனர் எனக் கூறியுள்ளார்.
சுமார் கி.பி. 1268-1310 – குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறிப்பு. பாண்டியர்களுக்கும் ஏமன் நாட்டவர்க்கும் 1289ஆம் ஆண்டில் சிறந்த குதிரை வணிகம் நடந்ததாக இபின் பட்டுடா குறிப்பு இருக்கிறது.
அசோகனின் கல்வெட்டுக்களில் :
மகத நாட்டு அரசர்கள் மௌரியர்கள். மௌரிய அரசன் பேரரசர் அசோகர் கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன.
சங்க காலப் பதிவுகள் :
பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும். வேப்பம் பூ மாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.
பாண்டிய நாட்டில் பிற நாட்டவர் ஆட்சி :
களப்பிரர் ஆட்சி :
வடநாட்டில் பல்லவர்களால் அடித்து விரட்டப்பட்ட களப்பிரர் கி.பி. (300-600) கன்னட நாடு வழியாக கொங்கு நாட்டிலும், சேர, சோழ, பாண்டி நாட்டிலும் புகுந்து பாண்டியர்களை அடக்கி ஆண்டனர். களப்பிரர்களைத் தொடர்ந்து வந்த பல்லவர் ஆட்சிக்காலமான கி.பி. 350 – 550 வரையிலும் பாண்டியப் பேரரசு பெரும் வீழ்ச்சியிலிருந்ததாகக் கருதப்படுகின்றது. ஆனாலும் கடுங்கோன் ஆட்சிக் காலத்தில் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது. பல்லவர்களின் தாக்கமும் களப்பிரர்களை வீழ்த்தியது. இதன் பின்னர் இடைக்காலப் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.
சோழராட்சி :
பாண்டிய நாட்டின் பெரும்பகுதிகள் கி.பி. 1020 முதல் 1070 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இராசராசன் மகனான இராசேந்திர சோழனின் மூன்று மகன்களான சுந்தரசோழ பாண்டியன், விக்கிரமசோழ பாண்டியன்,பராக்கிரம பாண்டியன் மூவரும் சோழ பாண்டியர் எனப் பட்டம் பெற்று பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சோழ மன்னர்களாவர். பாண்டிய நாட்டிற்கு இராசராச மண்டலம் எனப்பெயரிட்டு தங்கள் ஆட்சிக்கு முரண்பட்ட பாண்டியர்களை திறை செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்தனர்.
மகமதியர் ஆட்சி :
கில்ஜி பேரரசின் மன்னன் மாலிக்காபூரிடம் பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியனால் தன் தம்பியான இரண்டாம் வீரபாண்டியனை வெல்ல உதவியினை நாடினான். இரண்டாம் வீரபாண்டியனை வெற்றி கொண்ட மாலிக்காபூர் சுந்தரபாண்டியனை அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சயாவுடீன் பார்னி , அமீர்குசுரு, வாசப் போன்றவர்களின் கூற்றுகள் படி மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் அமைந்திருந்த கோயில்களை இடித்து அங்கிருந்த பொன், பொருள்களைக் கொள்ளையிட்டு சிற்பங்கள் பலவற்றையும் சிதைப்பதற்குக் காரணமானான். மேலும் கொள்ளையிட்ட பொருள்களை டில்லிக்குக் கொண்டு சென்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுந்தரபாண்டியன் மற்றும் இரண்டாம் வீரபாண்டியன் போன்றோரிடமிருந்து மாலிக்காபூர் 612 யானைகள், 20,000 குதிரைகள், 96,000 மணங்கு பொன், முத்து மற்றும் அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளினை எடுத்துச் சென்றான் என பார்னி என்பவன் குறித்துள்ளான். 1320களில் மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றி 1378ஆம் ஆண்டு வரை ஆண்டான். அவன் வழி வந்தவர்கள் நாயக்கர்களால் தோற்கடிக்கப்பட்டார்கள். 1330 ஆம் ஆண்டளவில் பாண்டிய நாட்டில் மகமதியர் ஆட்சி நுழைந்தது. டில்லி துக்ளக்கின் அதிகாரியாகத் திகழ்ந்த ‘ஜலாலுதீன் அசன்ஷா’ மதுரையினைக் கைப்பற்றி ஆட்சி செய்தான். இவனது ஆட்சிக்குப் பின்னர் அல்லாவுடீன் உடான்றி, குட்புதீன், நாசிருடீன், அதில்ஷா, பஃருடீன் முபாரக் ஷா, அல்லாவுதீன் சிக்கந்தர்ஷா போன்றவர்களின் ஆட்சி மதுரையில் இருந்தது. இவர்கள் தம் பெயர்களினால் நாணயங்கள் வெளியிட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் புதுக்கோட்டையில் உள்ள இரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இபின்படூடா என்பவரின் குறிப்பின் படி இம்மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுக் குழப்பங்கள், கலகங்கள் ஏற்பட்டன. கோயில் வழிபாடு, விழா இன்றி சீரழிந்தன. பாண்டிய நாட்டு மக்கள் துன்புற்றனர். என அவர் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ராயர்களின் ஆட்சி :
பாண்டியர் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சமயம் வாணாதிராயர்கள் பலர் இருந்தனர். புதுக்கோட்டை கோனாடு இருந்த பொழுது பிள்ளை குலசேகர வாணாதிராயன் ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான். இராமநாதபுரத்தில் கேரள சிங்கவள நாடு இருந்தது அங்கு வாணாதிராயன் என்பவன் ஆட்சி செய்தான். இவர்களின் பின்னர் பாண்டியர் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஸ்ரீவல்லிபுத்தூரில் 1453 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டில் “மகாபலி வாணதரையர் சீர்மையான மதுரை மண்டலம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் மதுராபுரி நாயகன், பாண்டிய குலாந்தகன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 1483 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டொன்றின் படி மாவலிவாணாதிராயர் பாண்டியருக்குத் திறை செலுத்தினர் எனக் குறிப்பிடும். பாண்டியர் வலிமை குன்றிய வேலை ராயர்கள் மதுரையினை ஆட்சி செய்துள்ளனர். புதுக்கோட்டை குடுமியான் மலைக் கல்வெட்டில் பாண்டியர் ராயரிடம் போரில் தோற்றமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராயர்களின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டு வரையில் தொடர்ந்தது பாண்டியர்களின் ஆட்சி இக்காலத்தில் இல்லாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
விஜய நகரப் பேரரசாட்சி :
கி.பி. 1310 முதல் 1748 ஆம் ஆண்டு வரை தமிழகத்தினை விஜயநகரப் பேரரசு ஆண்டது. நாயக்க மன்னர்கள் அரசியல் அதிகாரிகளாக ஆட்சி புரிந்துள்ளனர். இவர்கள் ஆட்சிக் காலங்களில் தமிழகத்தில் கோயில்கள், மண்டபங்கள், சிற்பக் கூடங்கள், உலகப் புகழ்பெற்ற சிற்பங்கள் போன்றனவை சிறப்பம்சமாக விளங்கின. சேர, சோழ, பாண்டிய போன்ற பேரரசுகள் விஜய நகரப் பேரரசு காலத்தில் வீழ்ச்சியுற்றிருந்தன. பல பாண்டிய மன்னர்கள் குறுநில மன்னர்களாக இருந்து விஜய நகரப் பேரரசிடம் திறை செலுத்தியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிய மன்னர்கள். பரக்கிரம பாண்டியன் எனற பெயரில் நாயக்கர் காலத்தில் மூன்று மன்னர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கி.பி. 1387 ஆம் ஆண்டளவில் பராக்கிரம பாண்டியன் திருக்குற்றாலத்தில் திருப்பணி புரிந்தான்.
கி.பி. 1384–1415 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்தான் பராக்கிரம பாண்டியன் என்ற பெயருடைய ஒன்னொருவன்.
கி.பி. 1401–1434 வரை பராக்கிரம பாண்டியன் ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான்.
சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்ற பெயர்கொண்ட ஒருவன் கி.பி. 1396 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றான் என கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டு குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.
திருப்புத்தூரி, குற்றாலம் ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகளின் படி கி.பி. 1401 முதல் 1422 வரை சடையவர்மன் விக்கிரம பாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவரும் பாண்டிய நாட்டினை ஆண்ட உதிரி அரசர்களாவர். இவர்கள் ஆட்சிக் காலத்து தலைநகரங்கள் மற்றும் இவர்கள் பணிகள் செய்த போர்கள் போன்றவற்றின் தகவல்கள் கிடைக்காததும் குறிப்பிடத்தக்கது.
பாண்டிய நாட்டுக் குறுநில மன்னர்கள் :
மானாபரணன், வீரகேரள பாண்டியன், சுந்தர பாண்டியன், விக்கிரம பாண்டியன், வீரபாண்டியன் ஆகிய ஜந்து மன்னர்களும் பாண்டிய நாட்டில் சோழராட்சி இருந்த சமயம் சோழ மன்னன் இராசாதிராசனால் அடக்கி வைக்கப்பட்டனர். மானாபரணன் மற்றும் வீரகேரளன் ஆகியோர் இராசராசனிடம் போரிட்டுத் தோற்று இறந்தனர். சுந்தர பாண்டியன் போரில் தோற்று முல்லையூரில் ஒளிந்துகொண்டான். விக்கிரம பாண்டியன் ஈழ நாட்டிற்குத் தப்பி ஓடினான். வீரபாண்டியன் கி.பி. 1048 ஆம் ஆண்டளவில் கொல்லப்பட்டான். கோலார் மிண்டிக்கல் கல்வெட்டு மற்றும் இராசாதிராசன் திருக்களச் செப்பேடு போன்றனவற்றில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாண்டியர் ஆட்சி இயல் :
தமிழகத்தின் தென்பகுதியில் பாண்டிய நாடு அமைந்திருந்தது. மேற்கே சேர நாடும், மலை நாடும்; கிழக்கே கடல், வடக்கே சோழ நாடும், கொங்கு நாடும்; தெற்கே கடலும் குமரிமுனை இதன் எல்லையாகவும் இருந்தன. இன்றைய மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை வெள்ளாற்றுக்குத் தெற்குப் பகுதியில் அமையப்பெற்றிருந்தது எனலாம். சங்க காலத்தில் ஊர், கூற்றம், மண்டலம், நாடு என்ற பிரிவில் அமைந்திருந்தன.
“முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு” – (புறம்-110)
“வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே” – (புறம்-242)
என்ற புறப் பாடல்கள் ஊரும்,நாடும் எனக் கூறும். இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்ற தொடர்மொழி அமைப்புச் சான்றாக விளங்குகின்றது. ஊர்கள், கூற்றங்கள், வளநாடுகள், மண்டலம் என்ற அமைப்பில் பிரிக்கப்பட்டிருந்தது.
குடும்பவியல் :
அரசன், அரசி, இளவரசன், பட்டத்தரசி என்ற முறையில் குடும்பம் அமைந்தது. பாண்டிய அரசன், வேந்தன் எனப்பட்டான். பட்டத்தரசி, பாண்டிமாதேவி எனப்பட்டாள். சில பாண்டிய அரசர்கள், பட்டத்தரசியை அன்றி பிற பெண்களையும் மணந்திருந்தனர். புராணங்களின் படி பெண்களும் முடிசூடி ஆட்சி நடத்தியதோடு போரும் செய்திருக்கின்றனர். அரசனின் மூத்த மகனே இளவரசு பட்டம் பெற இயலும். இதனால், மாற்றாந்தாய் மக்களுடன் பகைமை வருதலும் உண்டு. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மகன்கள் வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகிய பாண்டிய வேந்தர்களின் வரலாறுகள் இதற்குச் சான்றாகும்.
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தன் ஊழ்வினையால், கண்ணகி நீதி கேட்டதால் இறந்தான். அந்நேரம், இளவரசனாக கொற்கையில் இருந்த வெற்றுவேற்செழியன், மதுரைக்கு வந்து முடிசூடினான். ஜந்து பேர் ஒரே காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட நிலையும் இருந்தது. ஆட்சியின் காரணமாக அண்ணன் தம்பி, தந்தை மகன் கருத்து வேறுபாடுகள் வந்த போது, ஆட்சிக்காக தந்தையை மகன் கொன்ற ஒரு நிகழ்வு பிற்காலப் பாண்டியரின் வரலாற்றில் இருந்தது.
அரசியல் ஆட்சி இயல் :
பாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் அமைச்சர்கள். அடுத்த நிலையில் அரசியல் அதிகாரிகள், படைத் தலைவர்கள் இருந்தனர். அரையர், நாடுவகை செய்வோர். வரியிலார், புரவுவரித் திணைக்களத்தார், திருமுகம் எழுதுவோர் ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில் துணை செய்தவர்கள் ஆவார்கள்.
1- அரையர் உள்நாட்டுப் பணி புரியும் நாட்டதிகாரிகள் ஆவார்கள். இவர்கள், நாட்டைச் சுற்றி வந்து, குடிமக்கள் குறை கேட்டு நீதி வழங்குவர்.
2- நாடுவகை செய்வோர் ஊரில் உள்ள நிலங்களில் அளந்து பணி செய்வர்.
3- வரியிலார் அனைத்து வகையிலும் ஊர் மக்கள் அரசுக்கு வரி செலுத்துவதை கணக்கு வைப்பார்கள்.
4- புரவு வரித்திணைக் களத்தார் வட்டாட்சியர்போல் செயல்படுபவர்கள்.
அரசின் வரி :
பாண்டியர் காலத்தில் வரியை இறை என்றழைத்தனர். இறை பெறுதல் முறை என்பது வழக்கத்திலிருந்து வந்தது. குடிகள் அரசனுக்கு நிலவரி கொடுத்தனர். விளைநெல், காசு, பொன் வரியாகக் கொடுத்தனர். ஊர்த் தலைவர்கள் மக்களிடம் பெற்று அரசிடம் அளித்தனர். தளியிறை, செக்கிறை, தட்டார்ப் பட்டம், இடைவரி சான்று வரி, பாடிகாவல், மனையிறை, உல்கு முதலான வரி முறைகள் இருந்தன. இறை, பாட்டம் என்பன வரியினை உணர்த்தும் சொற்களாகத் திகழ்ந்தன. தட்டார்ப் பாட்டம் கம்மாளரின் வரியாகும். நாடு காவலையே பாடி காவல் என்றழைக்கப் பெற்றது. ஊர்க்காவலிற்கு வாங்கிய வரியே இப்பெயர் பெற்றது. பாண்டிய அரசர்களுள் சில அரசர்களும் ஊர்க்காவலிற்குச் சென்றனர். பொற்கைப் பாண்டியன் இதற்குச் சான்றாக விளங்குகின்றான். வீட்டு வரியினை மனை இறை என்றழைத்தனர். கலத்தினும், காலினும் வரும் பொருள்களுக்கு வாங்கும் வரியே சுங்க வரி எனப்படும்.
நில அளவியல் :
ஊர்தோறும் உள்ள நிலங்களை அளந்து வரி விதிக்கப்பட்டது. பாண்டிய நாடு முழுவதும் அளக்கப்பட்டது. நாடு வகை செய்வோர் அளந்தனர். நிலத்தினை அளக்கும் கோல் ‘சுந்தர பாண்டியன் கோல்’ என்ற பெயரைக் கொண்டிருந்தது. 24 அடி கொண்ட தடியாகும் இக்கோல். குடிதாங்கிக் கோலும் அளவு கோலாக புழக்கத்தில் இருந்தது. நிலங்களை குழி, மா, வேலி என்று பெயரிட்டு அளந்தனர். அளந்த நிலத்திற்கு எல்லைக் கல் நாட்டனர். இக்கற்களே புள்ளடிக் கற்களாகும். சிவன் கோயில்களிற்கு இடப்பட்ட நிலத்திற்கு திரிசூலக்கல் நடப்பட்டது. திருமால் கோயிலுக்கு இடப்பட்ட நிலத்திற்கு திருவாழிக்கல் நடப்பட்டது. நீர் நிலம் நன்செய் எனவும் மேட்டு நிலம் புன்செய் என அழைக்கப்பட்டது. நத்தம், தோட்டம் என்ற வழக்கும் புழக்கத்தில் இருந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாழ்க தமிழ் வளர்க தமிழ்மொழி
நன்றி மீண்டும் வருக ......